சரத் பொன்சேகா எம்.பியாகிறார் ?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்டது. இது தொடர்பான இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகாவும் அலரிமாளிகையில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் மறைந்த தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.கே.டி. எஸ்.குணவர்தனவின் வெற்றிடத்திற்கு சரத்பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை கூடவுள்ளதாவும் தெரியவருகிறது.

இந் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும்போது சரத்பொன்சேகா எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென்றும் அதன்பின்னர் அவருக்கு படையினர் நலன்புரி அமைச்சர் அல்லது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இவ் விடயம் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிடுவதாவது, நான் எம்.பி.யாக பதவியேற்கின்றமை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எப்போது என்பது தெரியாது. அமைச்சர் பதவி வழங்குவதா? இல்லையா? என்பதை ஜனாதிபதி பிரதமருமே தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்றம் வரவேண்டும் என்பது தொடர்பில் எம்.பி பதவி வெற்றிடமேற்படுவதற்கு முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்கள் இடம்பெற்றன என்றார்.

Related Posts