Ad Widget

கருத்து சுதந்திரத்தில் அரசியல் நுழையக் கூடாது – கமல்

ஆட்சி அதிகாரத்தால் கருத்து சுதந்திரம் பாதிக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியா எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் மாநாடு நடந்தது.

kamal-harvard-university

இதில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாஸன் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

கருத்து சுதந்திரத்தை ஜனநாயகம் பாதுகாப்பதாக பெருமையாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சி முறை. ஜனநாயக ஆட்சி முறையில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விழிப்புடன் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி தான் ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது.

கருத்து சுதந்திரம் என்பது யாரும், யாருக்கும் இரக்கப்பட்டு அளிப்பது அல்ல. ஜனநாயகம் என்றாலே கருத்து சுதந்திரம் என்று தான் அர்த்தம் என மெத்தனமாகவும் இருக்கக் கூடாது.

நான் ஒன்றும் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். உலகிற்கே முன்மாதிரி ஜனநாயகமாக இந்தியா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியா மட்டும் அல்ல உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் புதிய சவால்களை, வாய்ப்புகளை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியா மெத்தனமாக இல்லாமல் உலகிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்று நேருஜி கூறியதை நாம் வெகு விரைவில் இழக்க முயற்சித்து வருகிறோம். அரசியலில் மதம் நுழைவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. அதே போன்று கருத்து சுதந்திரம் என்பது அரசியலை தாண்டியது என்று நான் நினைக்கிறேன். அதில் அரசியல் நுழையக் கூடாது.

Related Posts