யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலரும், தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவருமான என்.வேதநாயகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பயணிகள் பேருந்து சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகளால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.
எனவே, இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொள்வதுடன் அவ்வாறு விதிகளை மீறி செலுத்தும் சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வதுடன் வாகன அனுமதிப்பத்திரமும் எதிர்வரும் காலங்களில் ரத்து செய்யப்படுமென தெரிவித்தார்.
எனவே யாழ் மாவட்டத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் உரிய வீதி போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தமது பயணங்களை மேற்கொள்ளவும் என அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.