பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது வல்லை – அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.
மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடும் வழங்கப்படவில்லை.
தற்போது விமான நிலையத்துக்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நட்டஈடு வழங்குவதற்காக, காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் நில அளவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1072 ஏக்கர் காணி இதன்போது சுவீகரிக்கப்படவுள்ளது.
வல்லை – அராலி வீதியில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கியுள்ள வீதித் துண்டையும், விமான நிலையத்துக்கான சுவீகரிப்பில் உள்ளடக்கிச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுவீகரிப்பு நடவடிக்கை முற்றுப் பெற்றால், மேற்படி வீதி எதிர்காலத்தில் விடுவிக்கப்பட முடியாத நிலைமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.