சிறை உணவையே சாப்பிடுகிறார் யோஷித – சலுகைகள் ஏதுமில்லை!

சிறையில் யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கும் எவ்விதமான மேலதிக சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும், ஆயினும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் சாதாரண கைதி அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கவிஷான் திஸாநாயக்க என்பவர் மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேவையற்ற விதத்தில் அவர்களை பார்வையிட வருவோரை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கைதி ஒருவரை, ஒரு நாளைக்கு உச்சபட்சமாக 3 பேர் மாத்திரம் பார்வையிடலாம், ஆயினும் அதிலும் பார்க்க அதிகமானோர் பார்வையிட நேரிட்டால், சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பார்வையிட வருவோர் அனைவரும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம் என்றார். மேலும் கைதிகள், தாங்கள் விரும்பும் பட்சத்தில், தமது மூன்று வேளை உணவையும் தங்களது வீடுகளிலிருந்தே பெற முடியும். ஆயினும் குறித்த 5 சந்தேகநபர்களும் அவ்வாறான கோரிக்கையை விடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது வரை சிறைச்சாலையிலிருந்தே அவர்களுக்கு உணவு பரிமாறப்படுவதாக தெரிவித்தார்.

Related Posts