Ad Widget

டி20 கிரிக்கெட் : அடிலெய்டில் ஒரு அடாவடி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது டிவி சேனல் ஒன்றுடன் பேசிக்கொண்டே பேட்டிங் செய்ததுதான், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆனதற்கு காரணம் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

steve-smith

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி செவ்வாய்க்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா கோஹ்லியின் 90 ரன்கள் உதவியோடு, 188 ரன்களை குவித்திருந்தது.

2வதாக ஆஸ்திரேலியா பேட் செய்தபோது, அதிரடி வீரர் வார்னர் அவுட்டானதையடுத்து களம் புகுந்தார், ஸ்டீவன் ஸ்மித்.

பேட் செய்தபோது, அவ்வப்போது, காதில் மாட்டியிருந்த மைக்ரோ போன் வழியாக ஆஸ்திரேலியாவின் சேனல்-9 தொலைக்காட்சி சேனல் வர்ணனையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியபடி இருந்தார்.

அந்த சேனலில் வர்ணனையாளர்களாக செயல்பட்ட மைக்கேல் ஹஸ்சி, இயான் ஹீலி, மார்க் நிக்கோலஸ் ஆகியோர் கேள்விகள் கேட்க அதற்கு ஸ்மித் பதில் கூறினார்.

இப்படித்தான், ஒரு கேள்விக்கு ஸ்மித் பதில் சொல்லிவிட்டு அடுத்த பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை ஜடேஜா வீசினார். ஆனால், கவனத்தை சிதறவிட்டிருந்த ஸ்மித்தோ, எக்குத்தப்பாக பந்தை அடிக்க, அது பேட்டில் பட்டு உயர்ந்து எழுந்து, மிட்-ஆப் திசையில் நின்ற விராட் கோஹ்லியின் கைகளில் தஞ்சமடைந்தது.

kohli-smith

கேட்சை பிடித்ததும், ஸ்மித்தை நோக்கி, வெளியே போ, வெளியே போ என்று கூறுவதை போல கைகளை அசைத்துக்காட்டி கோபத்தை வெளிப்படுத்தினார் விராட் கோஹ்லி. வெளியே போய் இன்டர்வியூ கொடு என்று சொல்வதை போல இருந்தது கோஹ்லி நடவடிக்கை.

மைக்கில் பேசியபடி பேட் செய்து, இந்தியாவுக்கு எதிரான போட்டியை ரொம்ப இலகுவாக ஸ்மித் எடுத்துக்கொண்டதுதான் கோஹ்லியின் கோபத்திற்கு காரணம் என்பது பிறகு தெரியவந்தது.

ஆஸ்திரேலிய ஊடகங்களும், அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களும், கோஹ்லியின் செயலை வரவேற்றுள்ளனர். சேனல்-9 மீதுதான் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போட்டிக்குள்ளேயே ரசிகர்களை இழுத்துச் செல்ல முயன்ற சேனல்-9 நடப்பது போட்டிதான் என்பதையே மறந்துவிட்டது என்று ரசிகர்கள் திட்டி தீர்த்துள்ளனர்.

ஆஸ்திரேலிய முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்ட், ‘ஸ்டீவ் ஸ்மித் அவுட்டுக்கு சேனல்-9 காரணம்’ என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் அதே குரலில் ஸ்மித் மற்றும் சேனல் நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.

Related Posts