ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் விரசேகர, சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான அறிக்கைகள் வெளி நபர்களுக்கு வழங்கப்படக் கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், இவ்வாறான எந்தவொரு அறிக்கையும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றிய இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டுள்ள சில புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களை பொலிஸார் பலவந்தமாக சிறையில் அடைத்துள்ளதாகவும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தாம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.