ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பிக்குகள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், முழுமையான அறிக்கையை, மல்வத்து மற்றும் கோட்டை மஹாநாயக்க தேரர்களுக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தமையை அடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பநிலை ஏற்பட்டது.
ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, பிக்குகள் சிலர் ஒன்று கூடியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
காவியுடை அணிந்த பிக்குகள் என கூறப்படும் சிலரே இவ்வாறு குழப்ப நிலையை ஏற்படுத்தியதாகவும், சட்டம் யாருக்கும் சமமானது எனவும் ரணில் விக்ரமசிங்க, இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.