“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது – எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது – இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப் பணியாற்றுவதும்தான்.”
“அரசியலமைப்பில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் குழு ஒன்றை அமைத்து யோசனைகளைப் பகிரங்கமாக முன்வைக்கும். இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையுடனும் இணைந்து செயற்படும்.”
– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைவர் பதவியேற்றிருப்பதும் அதனுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் பல விமர்சனங்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சரின் இந்த செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்புக்குள்ளும், வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சிக்குள்ளும்கூட பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் தனது செயற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியினருக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்றை நேற்று முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நடத்தியிருந்தார். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஆளும் கட்சியினர் முன்வைத்த வினைத்திறனுள்ள மாகாண சபை செயல்முறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குதல், அதிகாரப் பகிர்வு யோசனைகள் விடயத்தில் வட மாகாண சபையின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
மாகாண சபையின் நிர்வாக அலகை பலப்படுத்துவதற்கு இரு திறமைவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எனது அமைச்சின் சிரேஷ்ட உபசெயலாளராக திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் உள்ளீர்க்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் கடந்த ஒரு மாத காலத்தில் எனது அமைச்சின் வினைத்திறன் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளையும் மாகாண சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மேற்பார்வை செய்வர். அவர்களுக்கான கடமைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மக்களிடம் கேட்டறிய வேண்டிய வினாக்கொத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த அமைச்சர்களுடன் அவர்களை சேர்ப்பது என்பது குறித்து ஆராயப்படுகின்றது. இவை தொடர்பான ஆவணங்கள் விரைவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
உறுப்பினர்கள் தங்களின் கடமைகள் சார்பாக வாகனங்களை மாகாண சபையிடமிருந்து பெற்றுக் கொள்வது பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டுநர், எரிபொருள் சம்பந்தமாகவும் பரிசீலிக்கப்படுகின்றன. ஆகவே இவ்வருடம் மாகாண சபையின் செயல்முறைகள் வினைத்திறனுடன் செயற்படும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
இப்போதும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவையுடன் எனக்குத் தொடர்பிருந்தமையால் அதனைக் காரணங்காட்டி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முரணான வகையில் நடந்து கொள்ளப் பார்க்கின்றேன் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. 23.11.2015 இல் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் என்னை இணைத்தலைவராகப் பதவி ஏற்குமாறு கோரியபோது நான் சில உறுதிமொழிகளைக் கேட்டிருந்தேன். அவர்கள் 03.12.2015 ஆம் திகதிய தமது கடிதத்தின் மூலம் பின்வரும் உறுதிமொழிகள் தந்திருந்தார்கள்.
தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது, எந்த அரசியல் கட்சிக்கும் எதிராக இந்த அமைப்பு செயற்படாது, தமிழ் மக்கள் பேரவையின் ஒரே இலக்கு தமிழ் மக்களின் உரிமை, நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப் பணியாற்றுவதுமே.
இவ்வாறான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னரே நான் இணைத்தலைவராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். மேலும் இவ்வாறான அமைப்பின் குறிக்கோள்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனமும் ஒரே மாதிரியான இலக்கையே கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறிக்கோள் 2013 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி
தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.
புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகப் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வானது காணி, சட்ட ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவறறுக்கு அப்பால் சென்று பிரிவினையை வலியுத்துவதற்கோ 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்கோ தமிழ் மக்கள் பேரவை உறுதி பூணவில்லை. மேற் குறிப்பிட்ட கூட்டமைப்பின் குறிக்கோள்களை மையமாக வைத்தே கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்கள் பேரவை உள்ளடங்கலான அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்கின்றோம்.
அதிகாரப் பகிர்வு பற்றிய யோசனைகளே எங்கள் எல்லோர் மனதிலும் நிறைந்து நிற்கின்றன. வட மாகாண சபை தனது கருத்துக்களைக் கூற வேண்டி வரும். எங்களிடையே பா.டெனிஸ்வரன், சிராய்வா, சயந்தன் போன்ற சட்டத்தரணிகள் பலர் இருக்கினறனர். அவர்களை உள்ளடக்கி எமது யோசனைகளை தயாரித்து அவற்றை உரியவர்களுக்கு நாமும் அனுப்பலாம். நாங்கள் யாவருமே தமிழ் மக்கள் சார்பாகவே அதிகாரப் பகிர்வு யோசனைகளை முன்வைக்க முயன்று வருகின்றோம்.
எமது யோசனைகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் 2013ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அவை நோக்கப்பட்டு உரிய முடிவுக்கு வரலாம். என்னுடைய ஞாபகத்தின்படி 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுய நிர்ணயம் என்ற பதம் இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் காலத்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது இல்லை என்றே நினைக்கின்றேன்.
பின்னையதின் வரைவைத் தான் ஒரு வெள்ளிக்கிழமை எனக்கு பரிசீலிக்க அனுபு;பி வைத்தார்கள். அதைப் பரிசீலிக்க முன் சனிக்கிழமை காலையில் உத்தியோகபூர்வமாக மக்கள் முன்னிலையில் அது வெளியிடப்பட்டது. ஆகவே 2013 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் 2015 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றிடையே எந்தளவு வித்தியாசம் இருக்கின்றது என்பது பற்றி இந்த சட்டத்தரணிகள் குழாம் பரிசீலித்துப் பார்ப்பது நன்மையளிக்கும்.
அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வட மாகாண சபையும் ஒரு குழு அமைத்து யோசனைகளைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது – என்றுள்ளது.