புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மஹிந்தவின் அறிவுரை

புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு கட்டங்களாக இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ள அவர், முதல் கட்டமாக நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படுதல் மற்றும் தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியன இடம்பெற்ற பின்னரே ஏனைய நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் புதிய அரசியலமைப்பு தொகுக்கப்படும் போது, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் செயற்படுத்த முடியாத பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதிகாரங்கள் பகிரப்படும் போது உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற கீழ்மட்ட அமைப்புக்கள் பற்றி நீண்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதன் கீழ் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தேர்தல் ஒன்று நடத்தப்படுவது பொருத்தமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இடம்பெற்ற சொற்பொழிவின் போதே அவர் இவற்றை கூறியுள்ளார்.

Related Posts