Ad Widget

சஞ்சய் தத் விடுதலைக்கான காரணங்களை தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரிக்கை

திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி இதை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

சஞ்சய் தத் விடுதலை தொடர்பான கோப்பின் முழு நகல் மற்றும் சிறையில் அவரது நடவடிக்கை குறித்த தகவல்களைத் தருமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சஞ்சய் தத் தொடர்புபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், சஞ்சய் தத் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, “நன்னடத்தை” காரணத்துக்காக விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

அவருக்கான தண்டனைக் காலத்தை குறைக்கும் முடிவை சிறைக் கண்காணிப்பாளரே எடுத்தார் என்று மராட்டிய அரசு கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்த பின்னணியில் தற்போது தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சஞ்சய் தத் எந்த விதிமுறைகளின் கீழ், யாரால் அவர் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவிக்குமாறு கோரியுள்ளார். இதற்கான முடிவை யார் எடுத்தார்கள் என்றும் எந்த விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் என்னென்ன நடைமுறைகள் இதில் கடைபிடிக்கப்பட்டன என்றும் தனக்குத் தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரியிருப்பதாக அவருக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி தெரிவித்தார்.

Related Posts