பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி தமது எதிர்காலத்தினையும் நாட்டின் எதிர்காலத்தினையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கமையவே “ரண் சிறிலங்க ரண்” (Run SriLanka Run) என்ற நிகழ்ச்சித் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அனைவரும் விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் தமது உடல் நல அபிவிருத்தி குறித்தும் கவனமும் செலுத்த முடியும்.
மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகளில் மேலதிக புள்ளிகளை இணைத்து வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சுடன் இணைந்து புதிய செயற்திட்டமொன்றினை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.