நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல் வந்த இரவுகளில் இலங்கை அணியினர் மதுபான விருந்துகளில் பங்கேற்றமை தொடர்பான புகைப்படங்கள் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடத்தை என, அவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணியின் வீரர்கள் விருந்துகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரையிலும் மது அருந்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும் ஒருநாள் தொடரை 3-1 எனவும் மோசமாகத் தோற்றதோடு, இரு இருபதுக்கு இருபது போட்டித் தொடரையும் கூட 2-0 என நலுவவிட்டது.
இதனால் இருபதுக்கு 20 போட்டிகளின் தரவரிசையில் சுமார் 36 மாதங்களாக முன்னிலையில் இருந்த இலங்கை தற்போது மூன்றாம் இடத்திலுள்ளது.
இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபாலவுடன் இணைந்து இலங்கை அணியினரை அழைத்து நியூஸிலாந்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராயவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.