Ad Widget

கடல் நீரில் இருந்து நன்னீர்! யாழ் மாவட்டத்தில் முதல் முதலாக நெடுந்தீவில்

யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் நிதியுதவியுடன் நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையினை நிறைவு செய்யும் முகமாக கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் திட்டத்தின் பின்னோக்கிய பிரசாரணம் (Reverse Osmosis) முறையிலான இரண்டு பொறிகளை அமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.

nedunthevu-3

நெடுந்தீவு பிரதேசம் 8 கி.மீ நீளத்தையும் 6 கி.மீ அகலத்தையும் கொண்ட 48 சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடைய ஒரு தீவு மட்டுமன்றி ஏனைய தீவுகளை விட கடற்பரப்பில் அதிக தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பின்தங்கிய இடமாகும். இதற்கு முன்னர் இங்கு நன்னீர் கிடைக்கும் ஒரே ஒரு மூலமாக சாராப்பிட்டி மற்றும் மணற்கிணறு மட்டுமே காணப்பட்டது.

ஆரம்பத்தில் யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான திட்டமிடலில் யாழ் மாவட்டத்தின் 300,000 பேருக்கான குடிநீரைப் பெறுவது பற்றியே சிந்திக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொள்கலன்களில் அடைத்து நாளாந்தம் படகு மூலம் நெடுந்தீவுக்கு அனுப்புவதே சிறந்ததாகக் கருதப்பட்டது. குறிகட்டுவானில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அல்லது 7 கடல் கி.மீ தூரத்தில் கடலின் வழியே நெடுந்தீவுக்கு குழாய் வழி நீர் விநியோகம் சாத்தியமற்றதாகக் காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும். இங்கு நீர் குழாய்களமைப்பது மற்றும் அதில் பழுது ஏற்படும் போது அதனைக் கண்டறிந்து திருத்தம் செய்வது என்பது பொறியியலாளர்களைப் பொறுத்தவரை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது.

nedunthevu-1

ஆயினும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நெடுந்தீவுக்கு குடிநீரை வள்ளத்தில் ஃஅல்லது தோணியில் அனுப்பிக் கொண்டிருப்பது? இதற்கான செலவீனங்கள் காலநிலை மாற்றம், போக்குவரத்துப் பிரச்சினை மற்றும் ஆளணிப் பிரச்சினை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவுக்கான கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டம் சிறந்த ஒரு திட்டமாக முன்மொழியப்பட்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐப்பானிய வறுமைமைத்தணிப்பு நிதியம், வடமாகாண சபை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை என்பவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக இன்று இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவின் இறங்குதுறைக்குச் சமீபமாக பிடாரிமுனை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிக்கும் பொறிகம்பீரமாக இயங்குகின்றது.

இத்திட்டத்தினால் நெடுந்தீவில் வாழும் 4,530 பேர் கடுமையாக நீண்டகாலமாக எதிர்நோக்கிய குடிநீர்ப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கின்றது. இத் திட்டத்திற்கு 102 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன் நாளாந்த நன்னீர் உற்பத்தித்திறன் 50 கியூபிக் மீற்றர்கள் ( 50 x 1000= 50,000 லீற்றர்கள்) உடைய பொறியினால் தற்பொழுது நன்னீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது நெடுந்தீவு மக்களின் குடிநீர்த் தேவைக்குப் போதுமானதாகும். எதிர்காலத்தில் இதன் உற்பத்தித்திறனை 100 கன மீற்றர்களாக அதிகரிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நீர் இலங்கைதர நிர்ணய சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தரத்தினை (SLS 614:2013Publication) விட சிறந்தது மட்டுமன்றி உலக சுகாதார தர நிர்ணயத்துடனும் ஒத்துப்போகின்றது.

nedunthevu-2

மேலும் இச் செயற்பாடானது நாளாந்தம் துறைசார் வல்லுனர்களின் கண்காணிப்பினூடேவிநியோகிக்கப்படுவதுடன் உற்பத்தியின் பின்னர் ஏற்படும் கிருமித் தொற்றுக்களையும் நீக்கும் பொருட்டு குளோரின் கலக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

தற்போது பரீட்சார்த்தமாக இயங்கிவரும் இப்பொறியிலிருந்து மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தரையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறக்கூடியதாகவுள்ளது. வெகு விரைவில் வீடுகளுக்கான குழாய் வழி குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுவரை 300 புதிய இணைப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பாவனைக்கு விடப்பட்டதிலிருந்தும் முழுமையான கண்காணிப்பு இடம்பெற்று வருகின்றது. அத்துடன் சுற்றுச்சூழல் அதிகார சபைஇ கடலோர பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் அனுமதி பெற்றே இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி கடல் நீரை நன்னீராக்கும் போது வெளிவிடப்படும் உப்புச் செறிந்த நீரானது மீண்டும் கடலில் விடப்படுகின்றது. நீரோட்டத்தின் அளவு அதிகமாகக் காணப்படுவதனால் உப்பு நீரானது இலகுவாக கடல் நீருடன் கலப்பதுடன் மீனினங்களுக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. அத்துடன் மீள கடலில் விடப்படும் நீரானது துறை சார் வல்லுனர்களால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் அமைந்து பின்தங்கிய பிரதேசமாகக் கருதப்பட்ட நெடுந்தீவு பிரதேசம் யாழ் மாவட்டத்திலேயே முதலில் நன்னீர் பெறுகின்ற இடமாக மாற்றமடைய கடல் நீரை சுத்திகரிக்கும் பொறி உதவியுள்ளதுடன் இதன் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்பட வாய்ப்பளித்திருக்கின்றன. அதாவது உயர் தொழில்நுட்பம் சார் கைத்தொழிற் துறையினரைக் கவரும் அதே நேரம் சுற்றுலாத்துறை மற்றும் உட்கட்டுமான அபிவிருத்திகளில் வளர்ச்சி ஏற்படும்.

உயிர்ச்சூழல் மீன்பிடி நடவடிக்கைகளிலும் பிரச்சினைகன் எதுவும் ஏற்படவில்லை அத்துடன் இதற்கு அங்கு வாழும் மக்கள் காட்டிய ஆர்வமும் ஒத்துழைப்பும் மறுப்பதற்கில்லை. யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையிலேயே முதல் முறையாக கடல் நீரை சுத்திகரித்து தரமான நீரைப் பெறும் இடமாக இன்று நெடுந்தீவு விளங்குகின்றது. அதுமட்டுமன்றி குடிநீர் மூலம் ஏற்படும் நோய்களான சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகக் கல் போன்றன நெடுந்தீவில் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். மேலும் வேலை நிமித்தம் அல்லது சுற்றுலாவுக்காக நெடுந்தீவுக்குச் செல்பவர்களும் குடிநீர் தேடி அலைய வேண்டியதில்லை.

 

Related Posts