வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட மயிலிட்டி இறங்குதுறையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடற்படையினரின் உதவியுடன் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த இறங்குதுறை காணப்படுதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படாத நிலையில் மீனவர்கள் தொழிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் வர்த்தக பொருட்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதாக நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் தரித்திருந்த வணிகக் கப்பலில் இருந்து பொருட்களை இறக்குவதற்கான பணியாளர்களும் தரையில் காத்திருந்தனர்.
குறித்த கப்பலில் இந்தியத் தயாரிப்பான ராம்கோ ரக சீமெந்து ஏற்றிவரப்படுவது வழமை என பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மயிலிட்டி இறங்கு துறைமுகத்தை அண்மித்த பகுதியிலுள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.