இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் அதை சிறிது சிறிதாக அந்த நிலங்களை தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
அண்மைக் காலங்களில் பொது மக்களின் நிலங்களை விடுவிக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றாலும், அதை மேலும் விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் கூறுகிறார்.
பொதுமக்களின் நிலங்கள் விரைவாக விடுவிக்கப்படும்போது, அது அவர்களின் மீள்குடியேற்றத்தையும் விரைவுபடுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீள்குடியேற்றம் அத்தியாவசியமான ஒன்று என்பதை அரசு உணர்ந்துள்ளது எனவும் அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் நிலங்களை விரைவாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சுகாதாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.