வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (05) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலுப்பையடி, வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான கந்தையா யோகரத்தினம் என்பவரே யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு கிளை காரியாலயத்தில் இம்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
தனிமையில் வசித்து வரும் குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் ஒன்று கூடும் இளைஞர்கள், மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்து வந்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் வீட்டு, கதவு, யன்னல்களை உடைத்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தபோதும் பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்யாததுடன், தனக்கு உரிய தீர்வை பெற்றுத்தரவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வரும் இளைஞர்களின் அடாவடி அதிகரித்திருந்ததுடன், திங்கட்கிழமை (04) இரவு மதுபோதையில் வீட்டு வளவுக்குள் நுழைந்து பொருட்களை எடுத்தெறிந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் நேரடியாக சென்று கூறிய போதும், பொலிஸார் இளைஞர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர்.
எனவே, இவ் விடயம் தொடர்பில் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயோதிபப் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.