பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நூற்றுக்கு இரண்டு தொடக்கம் நான்கு வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோதுமை இறக்குமதி நிறுவனம் தமது உற்பத்திகளை இரண்டு ரூபாய் அதிகரித்து கொள்வனவாளர்களுக்கு வழங்குவதாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் ஒருகிலோ கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையாக 87 ரூபாய் சந்தைகளில் நிலவி வருகின்றது.
குறித்த கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் ஏற்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எனவே அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.