வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; இன்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) வெளியிட்டிருக்கும் அந்த ஊடக அறிக்கையில்,
வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டில், விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக 193 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிதி விவசாயத் திணைக்களத்துக்கு 90.84 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 52.36 மில்லியன் ரூபா, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 43.8 மில்லியன் ரூபா, கூட்டுறவுத் திணைக்களத்துக்கு 6 மில்லியன் ரூபா என்ற வகையில்; பிரித்து வழங்கப்பட்டிருந்தது. 2015 டிசம்பர் 31ஆம் திகதிக்குரிய நிதிநிலை அறிக்கையின்படி ஒதுக்கப்;பட்ட நிதியில் 192.34 மில்லியன் ரூபா, அதாவது 99.66 வீதம் செலவழிக்கப்பட்டுள்ளது.
பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக விவசாய அமைச்சுக்கும், அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களுக்கெனவும் 14.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிதி விவசாய அமைச்சுக்கு 8 மில்லியன் ரூபா, விவசாயத் திணைக்களத்துக்கு 2.5 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றுக்குத் தலா 1 மில்லியன் ரூபா என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2015 டிசம்பர் 31ஆம் திகதிய நிதிநிலை அறிக்கையின்படி இந்நிதி முழுமையாக, அதாவது 100 வீதம் செலவழிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சுக்கும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இந்நிதியில் எதுவும் அவசரம் அவசரமாகச் செலவழித்து முடிக்கப்படவில்லை. ஆண்டுத் தொடக்கத்தில் திட்டமிட்டவாறு கருத்திட்டங்கள் யாவும் எவ்வித மாற்றமும் இன்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையில் பூரணமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணசபைக்குரிய நடப்பு 2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் விவசாய அமைச்சுக்கும், அதற்குரிய திணைக்களங்களுக்கெனவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக 410 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 26.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டைப்போன்றே, இந்நிதியிலும் எதுவும் வீண்போகாத வகையில் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவும் உரிய காலத்தில் வினைத்திறன் மிக்கதாகவும் விளைபயன் மிக்கதாகவும் நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.