இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது.
இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இதன்படி 2-1 என நியூஸிலாந்து முன்னிலையில் இருக்க, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நெல்சன் சேக்டன் ஓவல் (Saxton Oval) மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டி மழை காரணமாக சில மணிநேரங்கள் தாமதித்தே ஆரம்பமாகிய நிலையில், 50 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்ட இந்த ஆட்டம் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் நியூஸிலாந்தைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. எனினும் அந்த அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 9 ஓவர்களை எதிர்கொண்டு 75 ஓட்டங்களை பெற்ற நிலையில் நியூஸிலாந்து மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.