Ad Widget

வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்!

வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த வாழ்கை சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.

அதன்படி தற்போது 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கையின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும். முதல் வருடத்தில் 11 ஆயிரம் வீடுகளும் 2,3,4 ஆம் வருடங்களில் தலா 18 ஆயிரம் வீதம் வீடுகள் அமைக்கப்படும்.

தற்போது முகாம்களில் பல இன்னல்களின் மத்தியில் வாழ்க்கை நடத்தும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டிய தேவை எனக்கு உள்ளதால் இந்த பணியை நிறைவேற்ற அர்பணிப்புடன் செயற்படுவேன்.

இந்நிலையில் முதலாவதாக 11 ஆயிரம் வீடுகளை அமைத்துவிட்டால் 32 முகாம்களில் வசிக்கும் எமது மக்களை 6 மாதங்களுக்குள் விடுவிக்க முடியும் அதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பூரன ஒத்துழைப்பு கிடைப்பது மாத்திரமன்றி அமைச்சரவையின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. இந்த வீடுகள் அமைத்துக்கொடுத்துடன் விட்டுவிடாமல் அவர்களுக்கான முழுமையான சலுகைகளும் வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்துடன் மலசலகூட மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படவுள்ளது. அதேபோல் கிணறுகள், தளபாடங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்த பணிகளுக்காக முன்னர் 2 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 14 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் தனியாக தமிழர்கள் மட்டும் என்று பார்க்காது வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் முழுமையான சலுகைகள் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தமது உரிமைகள் சரிவர கிடைக்காத நிலையில் 30 வருட யுத்தத்தில் ஈடுபட்டு பொருளாதார ரீதியிலும் தமிழ் மக்கள் பல துன்பகரமான நிலைபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கான தீர்வை பெற்றுத்தர எத்தனிப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

Related Posts