வடக்கு, கிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவுப் பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு மேசையில் மலையக மக்கள் சார்பான கட்சியும் இடம்பெற வேண்டும். இவற்றுக்கான ஆரம்ப கட்டமாக இன்று அமரர் சந்திரசேகரனின் 6 ஆவது சிரார்த்த தினம் திகழ வேண்டும்.இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 6 ஆவது சிரார்த்த தினம் நேற்று வெள்ளிக்கிழமை ஹற்றன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
மறைந்த அமரர் சந்திரசேகரன் பல போராட்டங்களுக்கு மத்தியில் தமது அரசியலை முன்னெடுத்தவர். அன்று வடக்கில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அரசாங்கத்தின் எதிரப்பையும் மீறித் துணிச்சலுடன் பங்கேற்றவர். இன்று மலையகத்தில் போராட்ட அரசியல் படிப்படியாக மறைந்து வருகின்றது. அதனை மீண்டும் தட்டியெழுப்ப மலையக மக்கள் முன்னணியும் அதன் உறுப்பினர்களும் மீண்டும் தயாராக வேண்டும்.
ஆயுதம் ஏந்திய போராட்டமாக இல்லாமல் அஹிம்சை போராட்டமாக அதனை நாம் முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழர்களே. எனவே நாம் அனைவரும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேச்சு நடத்தினார்கள். எதிர்காலத்தில் அந்தப் பேச்சு மேசையில் மலையக மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் இந்த தருணத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.
கடந்த பல வருடங்களாக வடக்கிற்கும் மலையகத்திற்கும் நல்ல ஒரு உறவு பாலம் இருந்து வந்தது. இடையில் அதில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணி இன்று முதல் ஆரம்பிக்கின்றது. அமரர் சந்திரசேகரனின் கனவை நனவாக்க நான் முழுமையாக என்னை அர்ப்பணித்து செயற்படுவேன் – என்றார்.