2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள்.
அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது.
இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற நினைவஞ்சலிப் பிராத்தனைகளில் உயிரிழந்தவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தார்கள்.
வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் இவ்வஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.