வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இதன்போது ‘காலநிலை மாற்றமும் வடமாகாணத்தில் அதன் தாக்கமும்’ என்ற கருப்பொருளில் யாழ் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜாவின் விசேட உரை இடம்பெற இருப்பதோடு, பேரிடர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் ‘காலத்துயர்’ என்ற கவிதா அரங்கமும் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் கடந்த அமர்வின்போது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால், ‘வடமாகாண இயற்கைப்பேரிடர் தணிப்புத்தினம்’ ஒன்றை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், இதற்கான நாளாக எமது தேசத்தைக் கடற்கோள் 2004ஆம் ஆண்டு தாக்கிய தினமான டிசம்பர் 26ஆம் திகதியைப் பிரகடனப்படுத்தவேண்டுமெனவும் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.