இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு – செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை 35 ரூபாவாலும், ஒரு கிலோ பைக்கற்றின் விலையை 90 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
400 கிராம பைக்கற்றின் தற்போதைய விலையான 325 ரூபாவை எவ்விதத்திலும் தொடர்ந்து நிர்வகிக்க முடியாதெனவும், வரவு – செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட தீர்வையால் விற்பனை விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இறக்குமதித் தீர்வை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருசில நிறுவனங்கள் தங்களது இறக்குமதிகளை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் வேறு சில நிறுவனங்கள் இறக்குமதிகளை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வழக்கமாகவே நுகர்வோர் அதிகாரசபைக்கும் பால்மா நிறுவனங்களுக்கும் இடையில் உருவாகும் இந்த இழுபறிப் போராட்டம் காரணமாக சந்தையில் பால்மாவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடுமென பாவனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.