வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வரவு செலவுத் திட்டம், இலங்கை – இந்திய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்றன தொடர்பில், உரிய தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் தீர்வு கிட்டாவிடில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் திட்டமிடல்களைத் தயாரிக்க இன்று விஷேட குழு அந்த நாட்டுக்கு சென்றுள்ளதாகவும், இதனால் இலங்கை தொழில்துறை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அந்த சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிபிட்டுள்ளார்.

மேலும் மாலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சி வழங்க அனுமதி இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வைத்தியத் துறையின் தரத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்ட நலிந்த ஹேரத், மாலபே தனியார் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற, 110 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் எனினும் அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சி பெற மாணவர்களுக்கு 50,000 ரூபா மட்டுமே செலவாவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகள் குறித்து விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமய தலைவர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களுக்கும் தெரியப்படுத்தி, தீர்வு கிட்டவில்லையாயின் ஜனவரி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts