இந்தியா உள்ளிட்ட மேம்பட்ட நாடுகளின் உதவியுடன் நாட்டு ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சில படைப் பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, தியாதலாவா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது:
ஆசியக் கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தபடியாக பழைமையானது இலங்கை ராணுவம். மேலும், கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்ற நமது ராணுவம், அனைத்து பெருமைகளுக்கும், புகழுக்கும் தகுதியானது.
பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் நல்லுறவு பேணுவதும், ஒருங்கிணைந்து செயல்படுவதும் மிகவும் அவசியம். அதேபோல், இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் இணைந்து செயல்படுவது முக்கியம்.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்குவது அவசியம். அதற்கான நடவடிக்கைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். இதனிடையே, இலங்கை ராணுவம் போரில் பெற்ற வெற்றிகளை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் செல்வாக்கை எவரும் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கக் கூடாது என்று ரணில் விக்ரமசிங்க பேசினார்.
முன்னாள் அதிபர் ராஜபட்சவை மறைமுகமாகத் தாக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.