‘வைத்தியர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பயின்று வைத்தியர்களாக வருகின்றனர். அவ்வாறு வரும் வைத்தியர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் சிறிது காலம் பணியாற்றுவதை வடமாகாண சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த வேண்டும்’ என வடமாகாண சபை
எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,
‘ஐஸ்கீறிம் பிரச்சினையை எழுப்பி, அதில் இருக்கும் சுகாதாரச் சீர்கேடுகளுக்காக விசேட படையணி மூலம் செயற்பாடுகளை மேற்கொண்டு, சுகாதாரச் சீர்கேடமான ஐஸ்கிறீம் கடைகளை மூடியது போன்று, உணவகங்களின் சுகாதாரம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பல உணவகங்கள் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்குகின்றன’ என்றார்.
‘குற்றங்கள் செய்தமைக்காக, சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்படும் சிறுவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது, இன்னும் மோசமானவர்களாக வெளியேறுகின்றனர். சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் சிறந்த வளவாளர்கள் இல்லாமையே இதற்குக் காரணம் ஆகும். இதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.