“புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்” என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை காரணமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வரும் தவறுகளுக்காக சர்வதேச நபர்களாகக் கருதப்பட்டுள்ளவர்கள் மற்றும் தண்டனைக்கு உட்பட்டுள்ளவர்களில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட சிறைக் கைதிகள் 34 பேரும், சந்தேகநபர்கள் அல்லது குற்றத் தீர்ப்பளிக்கப்படாதோர் 136 பேரும், மேன்முறையீட்டு சிறைக்கைதிகள் 10 பேரும் உள்ளனர்.
2015 ஜனவரி முதல் ஒக்டோபர் 20 வரையிலான காலப்பகுதியில் பிணை வழங்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபர்கள் மற்றும் கைதிகளுள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர்கள் 19 பேரும், சந்தேகநபர்கள் பிணையின்பேரில் விடுதலையானவர்கள் அல்லது விடுதலையானவர்கள் 67 பேரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள் 42 பேரும் ஆவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய தவறுகளுக்கு தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகளாக கருதுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதா என்ற கேள்விக்கு அரசியல் கைதிகள் என வகைப்படுத்தப்பட்ட ஒரு வகுதி இல்லை” – என்று அமைச்சு தெரிவித்துள்ளது.