இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்த ஆட்ட நிர்ணய சூதாட்ட முயற்சி நடந்துள்ளதாக இலங்கையின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
குஸல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய இலங்கை வீரர்களை அணுகிய நபர் ஒருவர், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு யோசனை கூறியதாகவும், அவர்கள் உடனடியாக அந்த முயற்சி பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவர் சிதத் வெத்தமுனி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் மோசடி தடுப்புப் பிரிவினர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், அந்த டெஸ்ட் போட்டியின்போது எந்த ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று குறிப்பாகக் கூறவில்லை என்றும் சிதத் வெத்தமுனி கூறினார்.
மேற்கிந்திய தீவுகளின் அணிக்கு எதிராக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, வேண்டுமென்றே இலங்கை அணியை தோல்வியடையச் செய்யுமாறு குறிப்பிட்ட சூதாட்ட தரகர், இலங்கை வீரர்களிடம் யோசனை சொல்லியுள்ளதாக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடத்திவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது, இருபது இருபது உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றியை தடுப்பதற்காக போடப்படுகின்ற சதித்திட்டம் என்ற சந்தேகம் இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.