கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சந்திரகாந்தனை கடந்த 2.12.2015 புதன்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருந்தினர்.
அதன் போது சந்திரகாந்தனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று புதன்கிழமை மீண்டும் நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.