தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான இணைத் தலைவர்கள் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதிக்கு இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்கு இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் இராமநாதனும் யாழ்.மாவட்டத்துக்கான இணைத் தலைவராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதியினால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இணைத் தலைமைப் பதவி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான இணைத் தலைமைப் பதவி தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.