சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கிய ‘ரஜினி முருகன்’ கடந்த தீபாவளிக்கே வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிப் போனது.
அடுத்தடுத்து பல தேதிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிப்புகள் எழுந்த வண்ணம் இருந்தபோதிலும், படம் ரிலீசாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ந் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், சென்னையில் பெய்த திடீர் கனமழையால் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தயக்கம் காட்டினர். மேலும், தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் திரையரங்கு உரிமையாளர்களும் படங்களை வாங்குவதில் பின்வாங்கினர்.
இதையடுத்து 4-ந் தேதியும் படம் வெளிவராமல் போனது. அதன்பின்னர் டிசம்பர் 4-ந் தேதி வெளியாகவேண்டிய படங்கள் அடுத்த வாரமே திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ‘ரஜினிமுருகன்’ படம் மட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்திற்கு மீண்டும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விட்டதோ என்று பயந்துபோன நிலையில், தற்போது இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறித்துள்ளனர்.
ஏற்கெனவே பொங்கலுக்கு விஷாலின் ‘கதகளி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை-2’ பாலாவின் ‘தாரை தப்பட்டை’ என நிறைய படங்கள் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது ரஜினிமுருகனையும் தைரியமாக களத்தில் இறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.