பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம் செய்ய அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள கடைகளில் கொடுத்து சீருடை துணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நடைமுறையின் கீழ், யாழ்ப்பாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரைக் எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் சென்றபோது, சீருடை துணி முடிவடைந்து விட்டதாகவும், துணி வரவேண்டும் எனவும் அங்கு கூறியுள்ளனர்.
இதன்காரணமாக, கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வடமராட்சியின் மருதங்கேணி மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் சீருடை விநியோகம் செய்வதற்கான கடைகள் அடையாளப்படுத்தப்படவில்லை.
இதனால், இந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து பருத்தித்துறை நகரத்துக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு சென்று துணிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலும் இவ்வாறான ஒரு நிலைமையுள்ளது. தீவகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மாத்திரம் சீருடை துணி விநியோகம் செய்யும் கடைகள் உள்ளமையால், அங்குள்ள மாணவர்கள் தங்களுக்கான சீருடை துணியை பெற்றுக்கொள்ள முடியாமல், யாழ்ப்பாண நகரத்துக்கு வருகை தந்து அங்கும் இல்லையென ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.