பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளக நீதிப் பொறிமுறையொன்றின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தினாலும், பொதுநலவாய நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்துள்ளது.
இதுவே இந்தப் பிரேரணையில் உள்ள முக்கியமானதொரு அம்சமாகும். எனினும், இது விடயம் தொடர்பில் அரசாங்கம் பகிரங்கமாக எதனையும் கூறாமல் தவிர்த்து வருகிறது. கடந்த காலத்தில் அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்திருந்தது என்பதை பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கைதிகளின் விடுதலை, காணிகளை விடுவித்தல் போன்ற சகல நடவடிக்கைகளும் உறுதிமொழி வழங்கியதைப் போன்று முன்னெடுக்கப்படவில்லை. இது சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளிலிருந்து விலகிச் செல்வதைப் போன்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக இலங்கை சர்வதேசத்திடம் உறுதியளித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிகவும் கொடுமையானதொரு சட்டம் என்பதை ஏற்றுக்கொண்டே அதனை நீக்குவதற்கு அரசாங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் இணங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கைதிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சந்தேகநபர்களின் வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றமொன்றையும் அமைத்துள்ளது.
நீக்குவதாக சர்வதேசத்திடம் உறுதி வழங்கிய சட்டத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு அவர்களை குறித்த சட்டத்தில் கைதிகளை விசாரிக்க முடியும். பெரும் குற்றம் இழைக்காத தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.
சிறைகளில் உள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளில் குறைந்த எண்ணிக்கையானவர்களைத் தவிர ஏனையவர்களை பிணையில் மற்றும் புனர்வாழ்வுக்கு அனுப்புவதாக நீதியமைச்சர் உறுதியளித்திருந்தார். எனினும், தற்பொழுது 150 பேரை விடுவிக்க முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
20 பேரை பிணையில் விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்டபோதும் ஒருவர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பிணையில் விடுவிப்பதாக உறுதியளித்த 61 பேரில் 39 பேர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்கள் பொறுமையிழந்துள்ளனர் – என்றார்.