முப்பது வருடகால யுத்தக் காலத்திலும் வட பகுதியில் தடுப்பூசி ஏற்றுவதற்காக பிரபாகரன் இரண்டு தினங்கள் அனுமதி வழங்கியிருந்தார். இதனால் இன்று வடக்கில் தடுப்பூசி வழங்குவது நூற்றுக்கு நூறுவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தனியார் துறையினர் ஊடுருவ இடமளிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான அமைச்சுக்களின் குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்த நிலை காணப்பட்டாலும் வடக்கில் நோய் தடுப்பு ஊசி வழங்குவதில் எந்தவிதமான தடையும் இருக்கவில்லை. பிரபாகரன் தடுப்பூசி வழங்குவதற்காக இரண்டு நாட்களை ஒதுக்கியிருந்தார்.
எனவே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வடக்கில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சிறப்பாக மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 141 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகின்றனர். இது பாரிய பிரச்சினையாகும். எனவே மாணவர்கள் மத்தியில் இலவச எச்.ஐ.வி. பரிசோதனைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளை விட இவ்வருடம் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மரணங்களும் குறைந்துள்ளன. தொற்றா நோய்கள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு கடந்த ஜூலை மாதத்துடன் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இனி மேல் அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே தனியார் வைத்தியசாலைகளுக்கு பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அத்தோடு அவர்கள் ஊடுருவவும் இடமளிக்க மாட்டோம்.
21 அரச வைத்தியசாலைகளில் இரவு 10.00 மணிவரையும் வெளிநோயாளர்கள் பிரிவு திறந்து வைக்கப்படும்.சேலைன் தேவைகளில் 100 க்கு 50 வீதம் சேலைன் உற்பத்தி இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
வைத்தியர்களுக்கு 20,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக பேசாத வைத்தியர்கள் வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக பேசுகின்றனர்.
சிங்கப்பூரில் மருத்துவக் கல்வி கற்ப தற்கு ரூபா 10 இலட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இலங்கையில் இலவச கல்வியின் மூலமே வைத்தியர்கள் உருவா கின்றனர் என்றார்.