Ad Widget

2ஆவது நாளாகவும் கைதியின் போராட்டம்

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ். அச்சுவேலி வடக்கை சேர்ந்த இவர் கடந்த 8ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது தந்தை ஜ.பி.சி செய்திக்கு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

37 வயதான சிவராஜா ஜெனிவன் என்ற தனது மகன் கடந்த 2006 ஆம் ஆண்டு பொலனறுவையில் வைத்து பேரூந்தில் பிரயாணம் செய்த போது இராணுவத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன் அவருக்கு எதிராக யாழ்பாண நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், பொலனறுவை நீதிமன்றத்தில் இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதாகவும், பொலனறுவை வழக்கிற்காக அவரிற்கு 10வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் யாழ்ப்பானத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்காக அவர் 6 வருடங்களாக சென்று வருகின்ற போதிலும் குற்ற புலனாய்வு பிரிவினர் குறித்த வழக்கு விசாரனைக்கு சுமுகமளிக்காத காரணத்தினால் வழக்கு விசாரணை முடிவின்றி தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால் தன்னுடைய மகன் மனஉழைச்சலுக்கு உள்ளாகி தனக்கு நீதிமன்றத்தினால் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரியே கடந்த இரு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜெனிவனின் தந்தை ஜ.பி.சி செய்திக்கு குறிப்பிட்டார்.

அத்தோடு, தாய், தந்தையாகிய தாம் இருவரும் வயது முதிர்ந்த நிலையில் பல்வேறு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் இறந்தால் தமது இறுதி கிரிகையை செய்யக்கூட எவரும் இல்லை எனவும் குறித்த தந்தை வேதனையோடு தெரிவித்தார்.

Related Posts