இலஞ்ச, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை கடந்த அரசு நடத்தத் தவறியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச இலஞ்ச, ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழுப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த அரசு (மஹிந்த அரசு) ஊழலுடன் செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஏற்பாடு செய்ய தவறியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஒளடத சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்குத் தயாராக இருந்தபோது, அனைத்து ஒளடத நிறுவனங்களிடமும் 25 இலட்சம் ரூபா வீதம் பெற்றுக்கொண்டு, அன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒளடத சட்டமூலம் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தது என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை 80 வீதம் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அந்த நடவடிக்கை 60 வீதம் வரை குறைக்கப்பட்டமை தமக்கு கவலையளிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமான முறையில் செயற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு என்ற வகையில் தாம் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இதன்படி, எதிர்வரும் சில வருடங்களில் நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.