பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, விசாரணைக்கு தேவைப்படாத பொருட்களை அவரிடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது ஜெயக்குமாரி சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கணேசலிங்கம், ஜெயக்குமாரியின் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பலதரப்பட்ட ஆவணங்கள் இரகசிய பொலிஸார் மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு தேவையற்ற ஆவணங்களை சந்தேக நபர்களிடம் மீள ஒப்படைக்க உத்தரவிடுமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனை கவனத்திற்கு எடுத்த நீதவான், இந்த விசாரணைகளுக்கு பயன்படுத்தப்படாத அல்லது தேவையற்ற ஆவணங்களை உரியவர்களிடம் கையளிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.