கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் இன்று சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவை முன்னெடுக்கப்படும் எனவும், முதல் கட்டமாக நிவாரண உதவிகளை கொண்டு வரும் விமானங்களே தரையிறக்கப்படும் எனவும் தேசிய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. இம்மாதம் ஆறாம் தேதிவரை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் எனவும், பகல் வெளிச்சம் இருக்கும்வரை விமான சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் ஸ்ரீவத்ஸா தெரிவித்துள்ளார்.
அங்கு நிலைமை மேம்படுவதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 5.30 நிலவரப்படி விமான ஓடுபாதையில் இருந்த நீர் வடிந்து விட்டது என்றும், குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டன எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இதர பணிகள் பரிசோதிக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளனர்.