“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்” என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பியினரும், பீல் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இருக்கின்றனர் என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த அவர், கைதிகளின் விடுதலையை தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி வெளியிடப்படும் யதார்த்தமற்ற கருத்துகளைக் கவனத்தில் எடுக்கக்கூடாது என்றும் ஆலோசனை வழங்கினார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக தாமாகவே முன்வந்து அரசு ஐ.நாவில் உறுதி வழங்கியதற்கமைய அதை நீக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் அரசின் தாமதம் குறித்து கவலையும் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட 19 விடயதானங்கள் தொடர்பிலான வரவு – செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.