வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டது.
இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக காவிரி டெல்டா, காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (நேற்று முன்தினம்), நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும்.
வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மற்றும் மிக கனமழை இருக்கும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை ஆகிய இடங்களிலும், காரைக்கால், கடலூர் ஆகிய பகுதிகளில் மேக தொகுதிகள் அதிகளவு இருப்பதால் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும்.
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுபகுதியால் கடல் பகுதியில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். எனவே கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தற்போது வலுவடைந்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுகுறைந்து தாழ்வுநிலையாக மாறும். அந்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் (இன்னும் 2 நாட்களில்) வலு இழந்துவிடும். கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல தரப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். மழை அளவுநேற்று (நேற்று முன்தினம்) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
கடலூர் 13 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் 12 செ.மீ., பேரையூர் 11 செ.மீ., வலங்கைமான் 9 செ.மீ., பண்ருட்டி 8 செ.மீ., புதுச்சேரி, முதுகுளத்தூர், சேரன்மகாதேவி, கடலாடி தலா 7 செ.மீ., சென்னை மீனம்பாக் கம் 3 செ.மீ., நுங்கம்பாக்கம் 2 செ.மீ. ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது.