கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற பெயரில் தரம் ஆறு மாணவர்களில் மூவரையும் தரம் எட்டு மாணவர்களில் ஒருவரையும் விசாரணை செய்து தனது தொலைபேசியை மீட்டுத் தருமாறு தரம் ஒன்பது மாணவர்களிடம் கூறியுள்ளார்.
அதற்கமைய மாணவர்களை அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியும், அடித்தும், சுவருடன் தலையை மோதியும் விசாரணை செய்துள்ளனர்.
இதனால் பாதிப்புக்குள்ளான நான்கு மாணவர்களே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றனர்.
இதில் ஒரு மாணவன் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக செவி வழியாக நீர் வடிந்த வண்ணம் உள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று புதன்கிழமை காலை பாடசாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளது. இருந்த போதும் மாணவர்கள் பிற்பகல் வீடு சென்று பெற்றோருக்கு தெரியப்படுத்தவே உடனடியாக பெற்றோர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது பெற்றோர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.