சர்வதேச சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது – மாவை

நாட்டுக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பது தொடர்பில் வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான 9ஆவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண உறுப்பினர்களை புறந்தள்ளிவிட்டு தாம் நினைத்ததைச் செய்யும் வகையில் அரசாங்கம் நடந்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கூட்டமைப்பின் உறுப்பினர்கள், மாகாணசபையின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு, கிழக்கிற்கான இணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நன்கொடையாளர் மாநாடொன்றை நடத்தவிருப்பதாக பிரதமர் தனது கொள்கை பிரகடன உரையில் கூறியிருந்தார். இந்த மாநாட்டுக்குச் செல்ல முன்னர் வடக்கு, கிழக்கின் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாகாணசபையின் பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வரவு- செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் தேவைகள் குறித்து அரசாங்கம் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்முடனோ அல்லது மாகாணசபையின் பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடவில்லை. அவ்வாறு கலந்துரையாடியிருந்தால் இவ்விரு மாகாணங்களுக்கும் மேலதிக நிதியினை ஒதுக்கியிருக்க முடியும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அரசியல் தீர்வொன்றை தருவதாக அரசாங்கம் இணங்கியிருந்தது. அது மாத்திரமன்றி கைதிகளை விடுவித்தல், காணிகளை விடுவித்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் போன்றவற்றுக்கும் அரசாங்கம் ஐ.நாவில் இணக்கம் தெரிவித்தது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியை செய்ய வேண்டுமாயின், அன்றாடம் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே தீர்க்க வேண்டும். இருந்தாலும் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபைகளின் பிரதிநிதிகளைப் புறக்கணித்து மத்திய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் வடக்கு, கிழக்கிற்கு வந்து தமக்கு விரும்பியவாறு செயற்படுகின்றனர். இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்பதற்காகவும், புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகியுள்ளதாலும் இம்முறை வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது என்றும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வு தொடர்பில் வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts