யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவோருக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் தளர்த்தப்பட்டுள்ளன.
இதில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அமர்ந்திருப்பதற்கென ஆசனங்களும் கடந்த வாரம் முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கென வருவோர்கள் பாஸ் நடைமுறையின் படியே கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதேபோல் பார்வையிட வருவோர் உள்ளே அனுமதிக்கப்படும் வரையில் வைத்தியசாலைக்கு வெளியே வெயிலிலும் மழையிலும் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய நிலைமை இருந்தது. இந்நிலைமை தற்போது மாற்றியமைக்கப்பட்டு பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு பார்வையாளர்கள் வெளியே காத்திருக்காமல் உள்ளே அமர்ந்திருப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காலையில் உணவு கொண்டு செல்வதற்கு 6 மணி முதல் 6.30 மணிவரையிலும் நண்பகல் 12 மணிமுதல் ஒரு மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 6 மணிவரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக் கப்படுகின்றனர்.
இவ்வாறு நோயாளர்களை பார்வையிட வருவோரில் வெற்றிலை மென்றுகொண்டும் மதுபோதையில் வருவோரும் நோயாளர்களை பார்வையிட பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைத்தியசாலைக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நோயாளர்களை பார்வையிட வருவோர் வைத்தியசாலையின் எந்த வாயிலினூடாகவும் உள்ளே வரவும் செல்லவும் முடியும். இவ்வாறு வருவோர் பொலித்தீன் பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தியசாலை வளாகத்தினுள் வீசாது இயன்றளவு தம்முடனேயே கொண்டு செல்லு மாறும் அல்லது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.