அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியத் திட்டமொன்றை தனியார்துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவில் எடுக்குமென, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பலர், அரசாங்கத் துறையில் பணியாற்ற விரும்புவதற்கு, அங்கு காணப்படும் ஓய்வூதியத் திட்டமே காரணமெனத் தெரிவித்த அவர், தனியார் துறையிலும் இணைந்து கொள்வதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
பொருளியலாளரான பிரதியமைச்சர் ஹர்ஷ, இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தையே அரசாங்கம், வளர்ச்சிக்கான இயந்திரமாகக் கருதுவதாகவும், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் காணப்படுவதைப் போன்ற சமூகச் சந்தைப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்க முனைவதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில், சமூக நீதிக்கும் தனிநபர் சுதந்திரத்துக்குமிடையிலான சமநிலையொன்று பெறப்படுமெனத் தெரிவித்த அவர், முதலீட்டு விடயங்களில் இது முதன்மையாகப் பின்பற்றப்படுமெனத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், கேந்திர முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு வாய்ப்புகளில்லை எனத் தெரிவித்ததோடு, இவ்வாறான நிறுவனங்கள், சிங்கப்பூரில் காணப்படுவதைப் போன்று, தனியார் – அரச துறையினரின் இணைப்பினால் நிர்வாகம் செய்யப்படுமெனத் தெரிவித்தார்.