பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் உட்பட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படும். 450 ருபாவிலிருந்து 1700 ருபா வரையிலான வவுச்சர்களே இதன் போது வழங்கப்படவுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வவுச்சர் திட்டத்தின் மூலம் பெற்றோர்களும் மாணவர்களும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் படியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் நாட்டிலுள்ள அனைத்து கடைகளிலும் சிறந்த தரமான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் உள்ளுர் விற்பனையாளர்களும் சிறந்த பலனையடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த வவுச்சர்கள் வகுப்பாசிரியரால் ஆவணப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.
பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்கு கொடுத்தால் அவர்களின் அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டு கையொப்பம் பெற்றுக் கொள்ளப்படும்.
1 தொடக்கம் 5 வரையான தர மாணவர்களுக்கான வவுச்சர் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமே வழங்கப்படும். இதேவேளை, ஏதேனுமொரு வவுச்சர் தொடர்பாக விற்பனையாளர்களுக்கு உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தனது தொலைபேசி வாயிலாக 0714390000 எனும் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி உறுதிசெய்து கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.