கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க் குழந்தைகளிடத்தில் இராணுவ வாதத்தையே ஏற்படுத்தும் என்றும் விசனம் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ துணைப் படையினருக்கு முன்பள்ளி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படப்போவதாகத் தகவலறிந்து அது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நான் கடிதமொன்றை எழுதினேன். எனது கடிதம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாகவும், இதுபற்றிய விவரங்களை உயரதிகாரிகளிடம் சேகரிப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து எனக்குப் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ துணைப் படையினருக்கு ஜனாதிபதியால் முன்பள்ளி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போது இந்த முன்பள்ளிகளில் இராணுவச் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடையுடனேயே ஆசிரியர்களும், மாணவர்களும் காணப்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இராணுவ பிரசன்னங்களும், இராணுவச் சின்னங்களும் அந்த தமிழ்க் குழந்தைகளிடம் இராணுவ வாதத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே, இந்த நடைமுறை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். முன்பள்ளிகளுக்கு இராணுவத்துடன் தொடர்புடையவர்களை நியமிக்கும் நடைமுறையை அல்லது முன் மாதிரியை ஏதாவது ஓர் உலக நாட்டில் உங்களால் காட்டமுடியுமா? அல்லது இலங்கையிலேனும் காட்டமுடியுமா? அப்படி எங்கும் இது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தமிழர் பகுதிகளை குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மட்டும் இலக்குவைத்து இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஏன்? திருமலை இரகசிய தடுப்பு முகாம் இதேவேளை, திருகோணமலையிலுள்ள இரகசிய தடுப்பு முகாமில் வன்னியில் பிரான்ஸிஸ் அடிகளார் தலைமையில் சரணடைந்த விடுதலைப் புலிகளையும் அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அடைத்து வைத்திருந்ததாகக் கட்டுரைகள், செய்திகள் வெளியாகியுள்ளன. பாலகுமார், அவரின் மகன் சூரியத்தேவன், யோகரட்ணம் யோகி, தங்கன் அறிவாளன், நாகேஸ், ரேகா, ராஜன், பூவண்ணன், மலரவன், இளந்திரையன் உட்படப் பலர் இவ்வாறு சரணடைந்து காணாமல்போயுள்ளனர்.
எனவே, இவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை எங்களுக்குண்டு. அந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை அரசு வெளியிடவேண்டும். இந்த அரசிடம் தமிழ் மக்கள் பல நல்லலெண்ண நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், அவற்றை வெளிக்காட்ட அரசு தயாரில்லாத நிலையே காணப்படுகிறது. தமிழ்த் தலைவர்கள் விட்டுக்கொடுப்புக்குத் தயார். ஆனால், சிங்களத் தலைவர் கள் இவ்வாறான விட்டுக்கொடுப்புக்குத் தயாரில்லை. 2002இல் விடுதலைப் புலிகள் தெரிவித்த மென்போக்கு அரசியலையே இப்போது நாம் பின்பற்றுகின்றோம். எனவே, சிங்களத் தலைவர்களும் அரசும் தமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்”