இந்திய ஆடுகளங்கள் குறித்து புகார் கூறிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் விளையாடி வரும் அம்லா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் (பிட்ச்) தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டு வருகிறது. மொகாலி மற்றும் நாக்பூரில் நடந்த டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா வெறும் 3 நாட்களில் ‘சரண்’ அடைந்தது. அத்துடன் 9 ஆண்டுகளாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையையும் நழுவ விட்டது.
நாக்பூர் டெஸ்டில் 40–ல் 33 விக்கெட்டுகள் சுழலில் விழுந்தவையாகும். இதனால் இந்திய ஆடுகளங்கள் குறித்து வெளிநாட்டினர் சரமாரியாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய ஆல்–ரவுண்டர் மேக்ஸ்வெல், இது கொடுரமான ஆடுகளம் என்று வர்ணித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதற்கு நாக்பூர் டெஸ்ட் ஒரு சாட்சி என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், ஆடுகளத்தை மறைமுகமாக சாடினார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியர்களின் விமர்சனங்களுக்கு இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி காட்டமாக பதில் அளித்துள்ளார். சாஸ்திரி அளித்த பேட்டி வருமாறு:–
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவதில் எந்த தவறும் இல்லை. நாக்பூர் ஆடுகளத்தில் ஆடியதில் இரு அணியினருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை. அடுத்த டெஸ்ட் நடக்கும் டெல்லி ஆடுகளமும் இதே போன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் அப்படி தான் எதிர்பார்க்கும்.
ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு, இந்திய ஆடுகளங்கள் குறித்து விமர்சிக்கலாம். இந்திய ஆடுகளங்கள் குறித்து பேசி, நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக இங்கு வந்து விளையாடுங்கள்.
அடிலெய்டு பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2–வது நாளில் மட்டும் 13 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஷஸ் தொடரில், டிரென்ட்பிரிட்ஜில் நடந்த டெஸ்ட் ஏறக்குறைய 2 நாட்களில் முடிவுக்கு வந்தது. அப்படியானால் இந்த ஆடுகளங்களில் எங்கு நேர்த்தி இருக்கிறது? ஆட்டம் 5–வது நாளுக்கு சென்று பந்து தான் சுழன்று திரும்பியதா?
முதல் நாளில் இருந்து ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பக்கூடாது என்று விதி எதுவும் இருக்கிறதா? அல்லது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ‘ஸ்விங்’ மட்டுமே ஆக வேண்டும் என்று தான் விதிமுறை கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள் பார்ப்போம். நாக்பூர் டெஸ்ட் போட்டி எல்லா நேரமும் முழு உத்வேகத்துடன் காணப்பட்டது.
ரன்மழை பொழிந்த (1,672 ரன்) பெர்த் டெஸ்டுடன் (நியூசிலாந்து–ஆஸ்திரேலியா) நாக்பூர் போட்டியை ஒப்பிட்டு பாருங்கள். முடிவு கிடைத்த நாக்பூர் டெஸ்டை தான் சிறப்பானது என்று சொல்வேன்.
நிறைய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதன் தாக்கத்தால், டெஸ்டில் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்ற மனப்போக்கு குறைந்து வருவதாக கருதுகிறேன். நாங்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது, ஆடுகளம் குறித்து எந்த புகாரும் சொல்வதில்லை.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.