நோர்வே அரசாங்கத்தின் 67 மில்லியன் ரூபாய் நிதியுதவி வளலாய் பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் தெரிவித்தார்.
இலங்கைக்கான தூதுவராக பதவியேற்ற தோர்ப்ஜோன், நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள் குடியேற்றம் செய்துவைக்கப்பட்ட கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் பகுதிக்கு நோர்வே தூதுவர் குழு விஜயம் வெள்ளிக்கிழமை (27) மேற்கொண்டிருந்தது.
இதன்போது நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டால் தான் வாழ்வாதரத்தினை சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனவும் மேலும் இப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி உள்ளது எனவும் தூதுவரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
பெண்களை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களுக்கு சுய தொழில் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த தூதுவர் 67 மில்லியன் ரூபாய் இக் கிராமத்திற்கு ஒதுக்குவதாக கூறினார். மேலும் மீன்பிடி, பொருளாதாரம் பொது வேலை, விவசாயம், கால்நடை மாற்றுவாழ்வாதாரம் என்பவற்றை இவ் நிதியுதவியூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதன் போது பிரதேசசெயலர் மருதுலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட காணி மேலதிக செயலர் சுப்பிரமணியம் முரளிதரன், கிராம சேவையாளர் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.